சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு புதிய தலைமை! – குமார வெல்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிப்பாதையில் பயணிக்க வேண்டுமாயின் கட்சிக்கு புதிய தலைமைத்துவமொன்று அவசியமென மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஆயத்தமாகி நாம் தோல்விடைந்துள்ளோம். எனவே, மீண்டும் ஒரு முறை எதற்காக தோல்விக்கு முகம் கொடுக்க வேண்டும்?

பொதுத் தேர்தலுக்குச் செல்லவேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகிறது. ஆனால், இந்தப் பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவே முடியாது.

மேலும், தற்போதைய நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைமைத்துவத்திற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

சிறிமாவோ பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சியை பாதுகாத்தார். சந்திரிகா குமாரதுங்கவும் கட்சிக்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அனைவரைவிடவும் கட்சிக்காக செயற்பட்டார். ஆனால், தற்போதுள்ள தலைவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் பெரிதாக சிந்திப்பதில்லை. இதனாலேயே நாம் எமது கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியமென வலியுறுத்துகிறோம்.

புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி செயற்படுமாக இருந்தால், நிச்சயமாக வெற்றிப்பாதையில் எம்மால் பயணிக்க முடியும்.

இவ்வாறான உண்மையை வெளிப்படையாகப் பேசும்போது, நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சோரம் போய்விட்டதாக சிலர் விமர்சிக்கிறார்கள்.

இதுகுறித்து நான் என்றும் கவலையடைந்தது கிடையாது. நான் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய மாட்டேன். இறக்கும்போதுகூட சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இறப்பேன்” என்றார்.