சீன – கொரிய நல்லுறவின் புதிய பரிமாணம்: வடகொரியாவில் முக்கிய நிகழ்வு

சீனா மற்றும் வடகொரியாவின் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன், வடகொரியாவில் கலைநிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

தலைநகர் பியாங்யோங்கில் இடம்பெற்ற குறித்த கலைநிகழ்வை வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் பார்வையிட்டுள்ளதை, அந்நாட்டு தொலைக்காட்சியான கே.ஆர்.டி. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

வடகொரிய கலாசார அமைச்சின் அழைப்பின்பேரில் சீன கலைஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பியாங்யோங்கை சென்றடைந்தனர். நல்லெண்ண விஜயமாக அமைந்துள்ள இந்த பயணத்தை முன்னிட்டு, இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, வடகொரிய தலைவரை சீன கலைஞர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பதும், அவருடன் குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டதையும் குறித்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது இருநாட்டு தலைவர்களினதும் நட்புரீதியான செய்திகள் பறிமாறப்பட்டதோடு, அச்சந்தர்ப்பத்தில் இருநாட்டு தலைவர்களினதும் ஒளிப்படங்கள் திரையில் காண்பிக்கப்பட்டன. அத்தோடு, இரு நாட்டு உறவையும் சுட்டிக்காட்டும் பாடலொன்றை இரு நாட்டுக் கலைஞர்களும் இணைந்து பாடினர்.

வடகொரிய தலைவருடன் பியாங்யோங்கிற்கான சீன தூதுவர் லீ ஜின்யுன்னும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.