சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு – சிறிலங்கா படையினருக்கு பீஜிங்கில் சிறப்பு பயிற்சி

சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறையைக் கொண்ட முதலாவது அணி பயிற்சிக்காக அடுத்த வாரம் பீஜிங் செல்லவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய சீனப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, மே 14ஆம் நாள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

திட்டங்கள் முன்னெடுக்கப்படும் இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை கொண்டதாக இந்தப் பயிற்சிகள் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சீன தூதரக பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில்,

“சிறிலங்கா படையினரின் மற்றும் பொலிசாரின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவிளையும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளையும் சீனா வழங்கும்.

காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் முதல் தொகுதியினருக்கான பயிற்சித் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாகும்.

நாங்கள் எமது இராணுவத்தினரை இங்கு அனுப்பப் போவதில்லை. அதற்குப் பதிலாக, சிறிலங்கா படையினரின் ஆற்றலை கட்டியெழுப்பவுள்ளோம்.

எமது பாதுகாப்பை அவர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே, எமது படையினரை இங்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை. இது எமது கொள்கை இல்லை. இதற்கு மேலதிகமாகவும் எம்மிடம் பயிற்சி வாய்ப்புகள் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.