சி.வி.யின் புதிய கூட்டணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் வித்தியாசமே இல்லை- கஜேந்திரகுமார்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உண்மையான, நேர்மையான தலைமைத்துவமாக தமது தலைமைத்துவம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் புதிய கூட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது புதிய கூட்டணி தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நான்கு நபர்கள் கூடியநிலையில் நான்கு கட்சிகள் கூட்டுச் சேர்ந்ததாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. எம்மைப் பொறுத்தவரையில் அது நான்கோ, பத்தோ, பதினைந்தோ என்பதல்ல. உண்மையில் எந்த அடிப்படையில் அரசியல் ரீதியாகச் செயற்படுகின்றனர் என்பதே முக்கியமானது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியதில் இருந்து கொள்கை ரீதியாக அந்தக் கூட்டமைப்பு பிழை விடுகிறது என்பதையும் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற அளிவிற்கு விலை போயிருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் பத்து வருடங்களாக நாம் முன்வைத்து வருகிறோம்.

அதனடிப்படையில் புதிய தலைமைத்துவம், நேர்மையான தலைமைத்துவம் அவசியமென்ற வகையில் பத்து வருடங்கள் கடந்து இயங்கிவரும் நாம் இன்றைக்கு இரண்டாம் பெரும் கட்சியாக வடக்கு கிழக்கில் இருக்கிறோம்.

அப்படிப்பட்ட ஒரு நிலைமை இருக்கையில் எங்களுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்காக கொள்கை ரீதியாக கூட்டமைப்பிலிருந்து எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக்கொண்டு வரும் தேர்தலில் எங்களுக்கு வரக்கூடிய அங்கீகாரத்தை குழப்புவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

எம்மைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நேர்மையான அரசியலை, கொள்கை சார்ந்த அரசியலைக் கொண்டுபோகக்கூடிய ஒரேயொரு தரப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். இந்த முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்ற சிவில் சமூகம், புத்திஜீவிகள் இந்த இனத்திற்கு தலைமை தாங்கக்கூடாது என்ற சிந்தனையில் பலரும் செயற்படுகின்றனர்.

தமிழ் மக்கள் ஒரு புதிய தலைமைத்தவத்தை தேடிக் கொண்டிருக்கிற நிலைமையில், அந்தப் புதிய தலைமைத்துவம் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக அடையாளப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் தடைகள் எல்லாத்தையும் தாண்டி தமிழ் தேசியமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.