சி.வி.யின் அறிக்கை திரிபுபடுத்தப்படுவதாக அருந்தவபாலன் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையை அரசியல் இலாபங்களுக்காக சிலர் திரிபுபடுத்துவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக கடந்த சனிக்கிழமை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதில், இந்திய நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் ஏற்கனவே விளக்கமளித்திருந்தனர்.

இந்நிலையிலேயே யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய க.அருந்தவபாலன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் சர்வதேச நீதிபதிகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை விசாரணை செய்வதற்கு சட்டரீதியாக முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் பொய்யானது என்பதை நிருபிக்கவே அவர் பகவதி தலைமையிலான குழுவை உதாரணமாகக் கூறியதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுச்செல்ல உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தும் நோக்கிலேயே அவர் அவ்வாறு கூறியிருந்ததாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் க.அருந்தவபாலன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது தொடர்பாக அரசியல் இலாபங்களுக்காக அவரது அறிக்கையை திரிபுபடுத்தி மக்களை குழப்பும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனரென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.