சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என கூறவில்லை – யாழ். கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனம் விளக்கம்

பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் தாம் செயற்படவில்லை என்றும் அதற்கான தேவை தமக்கு இல்லை எனவும் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்கள் ஐக்கியம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்று (புதன்கிழமை) வரையில் நடைபெறும் மத நிகழ்வில், ஏனைய மதங்களை நேரடியாக இழிவு படுத்தபடுகின்றது எனவும், சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என பரப்புரை செய்கிறார்கள் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.

மேலும் இதன் காரணமாக அந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும், “நாம் எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இல்லை. பிற மதங்களை இழிவுபடுத்தும் எந்த செயற்பாட்டிலும் நாம் ஈடுபடவில்லை. பிற மதங்களை இழிவுபடுத்தும் எந்த கருத்துக்களையும் நாம் வெளியிடவில்லை. உரிய தரப்பினர்களிடம் உரிய அனுமதிகளை பெற்றே நிகழ்வுகளை நடாத்தினோம். திட்டமிட்டபடி எமது நிகழ்வுகள் நடைபெற்றன” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.