சில்க் சுமிதாவுடன் ஷகிலாவை ஒப்பிடலாமா? – ரிச்சா சதா கேள்வி

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை கன்னடத்திலும் இந்தியிலும் சினிமா படமாக தயாராகிறது. இவர் தனது சுயசரிதையை மலையாளத்தில் சமீபத்தில் எழுதி வெளியிட்டார். அதை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகிறது. ஷகிலா தனது 16 வயதில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு இணையாக ஷகிலா படங்கள் வசூல் குவித்து பரபரப்பை ஏற்படுத்தின. அவரது படங்களுக்கு தியேட்டர்களில் அமோக வரவேற்பு இருந்தது. இதனால் ஷகிலா படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சில நடிகர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

ஷகிலா வாழ்க்கை கதை படத்தில் இந்த சம்பவங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சதா நடிக்கிறார். இதில் நடிப்பது குறித்து ரிச்சா சதா கூறியதாவது:-

“ஷகிலா வாழ்க்கை கதை படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கிறேன் என்றதும் என்னையும் வித்யாபாலனையும் ஒப்பிட்டு பேசத்தொடங்கி விட்டனர். சில்க் சுமிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் சுமிதாவாக வித்யாபாலன் நடித்து இருந்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. வித்யாபாலனோடு என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் ‘சில்க்’ சுமிதா, ஷகிலா வாழ்க்கை வெவ்வேறானது. இருவரையும் ஒப்பிட முடியாது.”

இவ்வாறு ரிச்சா சதா கூறினார்.

LEAVE A REPLY