சிறைத்தண்டனை வழங்கப்பட்ட செய்தியாளர்களுக்கு மேன்முறையீடு செய்ய வாய்ப்பு! – ஆங் சான் சூகீ

மியன்மாரில் 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இருவரும் வழக்கினை மேன்முறையீடு செய்யமுடியுமென்று மியன்மார் அரசின் தேசிய ஆலோசகரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

வியட்நாமின் தலைநகர் ஹனோயில் இடம்பெற்றுவரும் ASEAN பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அவர், இன்று (வியாழக்கிழமை) இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த இருவரும் ஊடகவியலாளர்கள் என்ற காரணத்திற்காக சிறைத்தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக மியன்மார் சட்டதிட்டங்களுக்கு எதிராக அவர்கள் இருவரும் செயற்பட்டதாகக் கூறியே நீதிமன்றம் அவர்களுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. எனினும், அவர்கள் இருவரும் வழக்கை மேன்முறையீடு செய்வதற்கான பூரண சுதந்திரத்தை கொண்டுள்ளனர். எனினும், அவ்வாறு மேன்முறையீடு செய்வதாயின், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பிலுள்ள பிழைகளை அவர்கள் சுட்டிக்காட்ட வேண்டுமென ஆங் சான் சூகி மேலும் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் வாழ்ந்துவந்த ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான ஆதாரங்களையும், அரசாங்கத்தின் இரகசிய தகவல்களையும் சேகரித்துக்கொண்டு வேறு நாட்டிற்கு தகவலளிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் வுவா லோன் (வயது-32), கியோவ் சயி (வயது-28) ஆகிய இரு ஊடகவியலாளர்களுக்கும் மியன்மாரில் 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்திற்கு மியன்மார் உள்ளானது. அவற்றிற்கு பதில் வழங்கும் முகமாகவே ஆங் சான் சூகீ இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.