சிறைகளில் கைதிகளுக்கு வழங்கும் சொகுசு வசதிகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? : உச்சநீதிமன்றம்

நாட்டில் சிறைகளுக்குள் தனி அரசு இயங்குகிறதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வீடுகட்டு தருவதாக மோசடி செய்த வழக்கில் யூனிடெக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் அவரது சகோதரர் அஜய் சந்திரா ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இவர்களுக்கு செல்போன், எல்இடி டிவி, இருக்கைகள் உள்ளிட்ட சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து கைதிகளுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து கூடுதல் செஷன்ஸ் மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு செய்து, அவர்கள் இருவருக்கும் பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். மேலும் சிறை வளாகத்தில் சொகுசு வசதிகளுடன் தனியாக அவர்களுக்கு அலுவலக வசதியும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், சிறையில் உள்ள சில கைதிகளுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்படுவது குறித்த செய்திகளை மேற்கோள் காட்டியுள்ளனர். ஒரு புறம் சிறையில் கைதிகளுக்கு போதிய வசதிகள் அளிக்கப்படவில்லை, அதே நேரத்தில், மறுபுறம் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சொகுசு வசதிகள் அளிக்கப்படுகின்றன என நீதிபதி கூறியுள்ளார். இதையடுத்து சிறை வளாகங்களில் தனி அரசு இயங்குகிறதா என்றும், இதை தடுப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் யூனிடெக் நிறுவன உரிமையாளர்களுக்கு சிறப்பு வசதிகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.