சிறுபான்மையினரின் ஆதரவு இன்றியே வெற்றி பெறுவேன் – கோத்தா

சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை.

2010இல் மகிந்த ராஜபக்ச, தமிழர்களின் ஆதரவு இல்லாமல், 1.8 மில்லியன் வாக்குகளால் வெற்றி பெற்றார்.

2015இல் அவர் தோல்வியடைந்தமைக்கு, தமிழ், முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காதமை அல்ல.

கொழும்பு, கம்பகா போன்ற மாவட்டங்களில் உள்ள நகரப்பகுதிகளில் உள்ள நடுத்தர மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. 449,000 வாக்குகளால் மாத்திரமே அவர் தோல்வியடைந்தார்.

அந்த சாதகமற்ற சூழ்நிலையில் கூட மகிந்த ராஜபக்சவுக்கு, வடக்கில் 1 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் வாக்குகள் கிடைத்தன.

போரின் போது, யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவ முகாம்களால் நிரம்பியிருந்தது. போர் முடிந்ததும், கீரிமலை, வசாவிளான், தொண்டைமானாறு போன்ற பகுதிகளில் உள்ள நிலங்களை விடுவித்தோம். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தை மாத்திரம் வைத்திருந்தோம்.

இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட தனியார் காணிகளில் 90 வீதமானவற்றை நான் விடுவித்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தை மாத்திரம் வைத்திருந்தோம்.

எமக்குத் தேவைப்பட்ட தனியார் காணிகளை கொள்வனவு செய்தோம். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு 3 இலட்சம் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டனர்.

தற்போதுள்ள கிளிநொச்சி நவீன மருத்துவமனை முன்னர் இராணுவ முகாமாக இருந்தது.

இவையெல்லாம், 2010இற்கும் 2014இற்கும் இடைப்பட்ட குறுகிய காலத்துக்குள் நடந்தன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.