சிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் ஐ.நா அதிகாரிகள் ஆலோசனை

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டக் குழு, அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

இந்தக் குழுவினர் நேற்று கொழும்பில் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க தூதுவர் தமது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில் “ ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியத்தின் அதிகாரிகள் ஜோர்ஜெட் கக்னொன், ஜூவான் பெர்னான்டஸ் மற்றும் அதிகாரியை இப்போது சந்தித்தேன்.

சிறிலங்காவில் மேலும் நல்லிணக்கம், மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக அரசாங்கத்துடனும், சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவுடனும், இணைந்து பணியாற்றும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவை நாங்கள் மதிக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே முன்வைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.