சிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் சார்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாகவே, சிறிலங்கா பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து, கூட்டு எதிரணியின் தலைவர்கள் நாளை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, சிறிலங்காவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மோசடி. இதற்குப் பொறுப்பானவர்களின் பட்டியலில் சிறிலங்கா பிரதமரே முதலிடத்தில் இருக்கிறார்.

இதற்குப் பொறுப்பான பிரதமரோ, அமைச்சர்களோ இந்தப் பதவிகளை வகிப்பதற்கு தார்மீக ரீதியில் உரிமையற்றவர்கள்.

உடனடியாக அவர்கள் பதவி விலக வேண்டும், அல்லது சிறிலங்கா அதிபர் இவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையில், சிறிலங்கா பிரதமர் மீது குற்றம்சாட்டப்படவில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

எனினும், சிறிலங்கா அதிபரே, பிரதமரைக் காப்பாற்றியுள்ளதாக, ஜேவிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY