சிறிலங்கா நிலைமைகள் – ஜெனிவா இணை அனுசரணை நாடுகள் கவலை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றும் வேகம் மெதுவாகவே உள்ளது என்றும், இதற்கு, அதிகாரத்துவ தடைகள் காரணமாக இருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான இணைஅனுசரணை நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரில், இணை அனுசரணை நாடுகளின் சார்பாக, பிரித்தானிய பிரதிநிதி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மொன்ரெனிக்ரோ மற்றும் பிரித்தானியா சார்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான இணை நாடுகள் குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

தனது அறிக்கையை புதுப்பித்துக் கொண்டமைக்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், ஏப்ரல் மாதத்தில் சிறிலங்காவில் ஏற்பட்ட பயங்கரமான உயிர் இழப்புகளுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேரவையின் இணைத் தீர்மானம் 30/1 இன் மூலம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்காக பரந்த சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதான உரிமையை சிறிலங்கா எடுத்துக் கொண்டு நான்கு ஆண்டுகளாகின்றன.

அண்மையில், ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40/1 தீர்மானத்தின் மூலம், சிறிலங்கா இந்த வாக்குறுதிகளை மீள் உறுதி செய்தது.

சிறிலங்கா தனது மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள், தேசிய நல்லிணக்கம், உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது என்று இணை அனுசரணை குழு நம்புகிறது.

தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிறிலங்காவின் எதிர்காலத்தை ஆதரிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டில், இணை அனுசரணை குழு உறுதியுடன் உள்ளது.

இந்த நடவடிக்கைகள் வெற்றி பெற சிறிலங்கா அரசு மற்றும் சிறிலங்கா மக்களிடமிருந்து தொடர்ச்சியான ஆதரவு முக்கியமானதாக இருக்கும்.

2015 ஆம் ஆண்டில் இருந்து முக்கியமான முன்னேற்றங்கள் நடந்துள்ளன. அவை சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பிலுள்ள நல்ல நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. மற்றும் பல உறுதியான பணியை பிரதிபலிக்கின்றன.

சில முக்கியமான உள்நாட்டு நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், பல பகுதிகளில் முன்னேற்றத்தின் வேகம் மெதுவாகவே உள்ளது, அதிகாரத்துவக் கட்டுப்பாடுகள் இதற்கு இடையூறாக உள்ளன.

மிக அண்மைய தீர்மானத்தில், சிறிலங்கா தேசிய நடைமுறைப்படுத்தல் மூலோபாயத்தின் மூலம், இதற்கான நடவடிக்கைக்கு தெளிவான காலஎல்லையுடன் செயற்பட பேரவை ஊக்கமளித்தது. சிறிலங்கா இதற்கு முன்னுரிமை அளிக்கும் என்று நம்புகிறோம்.

உயர் ஆணையாளர் அம்மையாரே, ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிப்பது, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான சிறிலங்காவின் உறுதிப்பாட்டுடன் கடுமையாக சமரசம் செய்கிறது என்றும், நல்லிணக்க முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும், ஒகஸ்ட் 19 ஆம் நாள் நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படுத்திய கவலையை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

சிறிலங்கா அரசியல் வெளி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டில்,நம்பிக்கையை வளர்ப்பது, அமைதி மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது என்று இணை அனுசரணைக் குழு நம்புகிறது.

தலைவர் அவர்களே,

இந்த சபை பல ஆண்டுகளாக சிறிலங்கா நிலைமைகளை கையாளுகிறது. கடந்த காலத்தின் கடுமையான மீறல்களை நிவர்த்தி செய்வதில், அவசியமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஆனால் இந்த வேலை முழுமை அடையாமல் உள்ளது. மேலும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான பாதையில் தொடர்ந்தும், இந்த சபையும்அனைத்துலக சமூகமும் சிறிலங்காவுக்கு தேவையான கவனத்தையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவது மிக முக்கியம்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.