சிறிலங்கா கடற்படையில் விமானப்படைப் பிரிவை உருவாக்கத் திட்டம்

சிறிலங்காவின் கடல் எல்லைகளை கண்காணிக்கும், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த சிறிலங்கா விமானப்படையின் கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய அச்சுறுத்தல்களும், சிறிலங்காவின் புவிசார் மூலோபாய முக்கியத்துவமும், கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு உயர்வசதிகளைக் கொண்ட கடற்படைக் கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வான் மற்றும் கமல்சார் ஆற்றல்களை கட்டியெழுப்பும் வகையில், விமானப்படையுடன் இணைந்த- கூட்டு தொடர்பாடல் வலையமைப்புடன் கூடிய, கூட்டு கட்டளை அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்தகைய வலையமைப்பு விமானப்படையின் புலனாய்வுக் கண்காணிப்பு மற்றும் வேவுபார்க்கும் முறைகளுடன் இணைந்து செயல்படும். இது, கடல்வழி விழிப்புணர்வை மேலும் நவீனமயப்படுத்தும்.

இது முன்னேற்றகரமான வலுப்படுத்தப்பட்ட சூழ்நிலை விழிப்பு நிலையை உருவாக்கும் வகையில், சிறந்த மையப்படுத்தப்பட்ட கட்டளை, கட்டுப்பாட்டு,புலனாய்வு கட்டமைப்புக்கு வழியை ஏற்படுத்தும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு விமானங்களே இன்னமும் பிரதான தெரிவாக உள்ளன. உயரத்திலும், வேகமாகவும் செல்வதற்கும், விரைவாக இடத்தை அடைவதற்கும் அவற்றினாலேயே முடியும்.

பல அரசாங்கங்கள் அதற்கே முதலிடத்தைக் கொடுக்கின்றன. எமது நாட்டிலும், மோதல்களின் போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும், முதலில் விமானங்களின் உதவியே பெறப்பட்டன.

இதனால் நாங்கள் எமது விமான ஆற்றல்களை பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற முறைகளில் அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY