சிறிலங்கா அரசை மடக்க கூட்டமைப்பிடமுள்ள இறுதி அஸ்திரம்!

அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையாக நேர்மையாகச் செயற்படுவதாக இருந்தால் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கத் தயாரா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார்.

யாழ். கொக்குவில் பகுதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கேட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது… வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் அதைச் செய்கிறது இதைச் செய்கிறது இதனை செய்யவில்லை அதனைச் செய்யவில்லை என்றெல்லாம் அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

ஆனால் அவை அனைத்தும் தேர்தல்கள் நெருங்கி வருகின்றதால் மக்களை ஏமாற்றுவதற்கான நடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும் பாதுகாத்ததுடன் தற்போதும் பாதுகாத்து வருவதே இதே கூட்டமைப்பு தான். ஆகவே தான் நாம் கேட்கின்றோம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லை என்றால் அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதென்றால் அத்தகைய வரவு செலவுத் திட்டத்தை ஏன் ஆதரிக்கின்றீர்கள் என்று நாம் கேட்கின்றோம். ஆகையினால் அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு தயராக உள்ளீர்களா என்றும் கேட்கின்றோம்.

ஆனால் இன்றைய நிலையில் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் தேர்தல்கள் வரவிருக்கின்றது. ஆகவே தமது வாக்கு வங்கிகளாக மக்களை ஏமாற்றுவதற்காக தங்களால் ஆன அனைத்தையும் செய்வார்கள். அதனடிப்படையிலையே வரவு செலவுத் திட்டத்தை விமர்சித்தும் குற்றஞ்சாட்டியும் வருகின்றனர்.

ஆனால் இறுதியில் அந்த வரவு செலவுத் திட்டத்திற்கே ஆதரவாகத் தான் வாக்களிப்பார்கள். ஆனாலும் இந்த வரவு செலவுத் திட்டத்திதை நிறைவேற்ற பொதுவான ஆதரவு வாக்குகள் இருந்தால் சில வேளைகளில் தாம் அதனை எதிர்ப்பது போலவும் பாசாங்கு காட்டுவார்கள். ஏனென்றால் எமது மக்களை ஏமாற்றுவதற்காக அவர்கள் அதனையும் செய்வார்கள். ஆனால் அரசிற்கு ஒரு நெருக்கடி வருகின்ற போது நிச்சயம் அரசிற்கு ஆதரவாகத் தான் செயற்படுவார்கள். இது தான் அவர்களின் உண்மையான செயற்பாடாக இருக்கும்.

ஆகவே கூட்டமைப்பின் ஏமாற்று நாடக வித்தையை மக்கள் சரியான வகையில் விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களுக்குச் சேவை செய்யாமல் அரசிற்கு சேவை செய்யும் சேவகனாகவே செயற்பட்டு வருகின்றனர். இந்த யதார்த்தத்தையு உண்மைகளை மக்கள் விளங்கிக் கொண்டு செயற்படுவது அவசியமானது.

இந்த அரசினூடாக தமக்கு பெற வெண்டிய அனைத்தையும் அவர்கள் பெற்று விட்டனர். இனியும் பெற வேண்டியதை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். அதற்காக தொடர்ந்தும் அரசிற்கு தமது ஆதரவையும் அவர்கள் வழங்குவார்கள். ஆகவே வெட்டி வீராப்பு பேச்சுக்களை பேசி மக்களை ஏமாற்றாமல் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட முன்வர வேண்டுமென்றார்.