சிறிலங்கா அதிபரின் பிலிப்பைன்ஸ் பயணம் அரச நிதி வீணடிப்பு – ஹர்ஷ டி சில்வா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் பயணம், எந்தத் திட்டமும் இன்று மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனால் அரசாங்கம் பயணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த வாரம் ஐந்து நாட்கள் பயணமாக பிலிப்பைன்ஸ்சுக்கு சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார்.

சிறிலங்கா அதிபரின் குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வெளிவிவாகர அமைச்சர் திலக் மாரப்பன மாத்திரமே இடம்பெற்றிருந்தார்.

அந்தக் குழுவில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, லசந்த அழகியவன்ன, நிசாந்த முத்துஹெற்றிகம,வசந்த பெரேரா, சரத் துஷ்மந்த, அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இது, அரசியல் மட்டங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா,

“மோசமாகத் திட்டமிடப்பட்ட அரசுமுறைப் பயணங்களால் பொது நிதி வீணடிக்கப்படுகிறது. வரி செலுத்துவோரின் பணம், அரசியல்வாதிகளின் உதவியாளர்களுக்காக, வீணடிக்கப்படக் கூடாது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் பயணம், நிச்சயமாக எந்தத் திட்டமிடலும் இன்றியே மேற்கொள்ளப்பட்டது.

ஒரு அரசாங்கக் குழுவில், அமைச்சர்களும், அதிகாரிகளுமே இடம்பெற வேண்டும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒருவர் அல்லது இருவர் இடம்பெறுவதில் தவறில்லை.

ஆனால், அவர்கள் அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களில் பங்கேற்க அதிகாரமில்லை. ஆனால் பிலிப்பைன்ஸ் பயணத்தில் அது தான் நடந்ததை கண்டோம்.

இது கேலிக்குரியது. அனைத்து மரபுகளையும் மீறுகின்ற செயல். பொது நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.