சிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உடன்பாடுகள், பாதுகாப்புக் கருவிகள் விநியோகம் மற்றும் இராணுவத்தினருக்கான பயிற்சிகள் போன்ற அடிப்படை காரணிகளை மாத்திரமே உள்ளடக்கியிருப்பதாக, சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் சீனாவுக்குச் சென்றிருந்த போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடப்பட்டது.

இந்த பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில், கொழும்பில் உள்ள சீன தூதரக பேச்சாளர், விளக்கமளித்துள்ளார்.

“சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, நீதியமைச்சர்தலதா அத்துகோரள, அமைச்சர் தயா கமகே ஆகியோர் முன்னிலையில் இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள் இரகசியமாக மூகூடி மறைக்கப்படவில்லை. சிறிலங்கா தொடர்பான சீனாவின் கொள்கை நிலையானது. அதே கொள்கைளைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம்.

இந்த பாதுகாப்பு உடன்பாடுகளின் அடிப்படையில் சிறிலங்காவில் சீனா தனது புலனாய்வு சேவைகளை நிறுத்தவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.