சிறிலங்காவுக்கு நவீன இராணுவ கருவிகளை அனுப்புகிறது சீனா

கண்காணிப்பு கருவிகளை வழங்குமாறு சிறிலங்காவிடம் இருந்து சீனாவுக்கு கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத முறியடிப்பு பொறிமுறைக்காக சிறிலங்காவுக்கு கண்காணிப்பு கருவிகளை சீனா வழங்கவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் குறித்து, எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“சிறிலங்காவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால், சீனா உதவத் தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து எந்த கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை.

நாட்டின் இறைமைக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் எமது நாடு தலையீடு செய்யாது.

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், அவசர தொலைத்தொடர்பு கருவிகள், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் கருவிகளை சிறிலங்காவுக்கு சீனா அனுப்பி வைக்கவுள்ளது.

எனினும் சீன இராணுவத்தினர் இதில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.