சிறிலங்காவுக்கு டோனியர் விமானத்தை வழங்குகிறது இந்தியா

டோனியர் ரக கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்காவுக்கு, இந்தியா வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாகவே டோனியர் விமானம் ஒன்றை சிறிலங்காவுக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

பிராந்திய நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த நிலையிலேயே, இந்திய கடற்படையின் பயன்பாட்டில் உள்ள டோனியர் விமானம் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் ராஜேந்திர சிங், சிறிலங்கா கடலோர காவல் படைத் தளபதி றியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடலோரப் பாதுகாப்பு, சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்தல், போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.