சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான அறிக்கை சரியானதே என்றும், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருபப்பதாகவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா அரச தரப்பு குழுவுடன் நான் நடத்திய கலந்துரையாடல் திரிபுபடுத்தப்பட்டுள்ளமை ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் கருத்தை நாளிதழ் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம், அல்லது ஆளுநர் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் அல்லது என்னை தவறாக மேற்கோள்காட்டியிருக்கலாம்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள சில விடயங்கள்“ தவறானவை என்றும் அதனை மன்னிக்க முடியாது என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் அம்மையார் தம்மிடம் ஒப்புக்கொண்டார் என, அரசதரப்பு குழுவின் உறுப்பினரான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கூறியதாக டெய்லி மிரர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இன்னும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர், அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இரண்டு ஐ.நா அதிகாரிகளுக்கும், ஆலோசனை வழங்கினார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவை ஒன்றும் உண்மையில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயல்முறை தொடர்பான செய்தி சிறிலங்காவில் தொடர்ந்தும், தவறாக வெளியிடப்படுகின்றன.

வழக்கமான நடைமுறைகளின் படி, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, வெளியிடப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அறிக்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்னர், சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன.

கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அதிகாரிகளுடன் நடத்தியிருந்தனர்.

பொறுப்புக்கூறல் முக்கியமானது. தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வதானது, சமூக அல்லது இனங்களுக்கிடையிலான வன்முறைகளையும், உறுதியின்மையையும், ஊக்குவிக்கிறது.

இந்த பிரச்சினையைத் தீர்த்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது, பாதிக்கப்பட்ட எல்லா சமூகங்களின் மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமானது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது கவனம் செலுத்த வேண்டும், தமது வாக்குறுதியை மதித்து, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.