சிறிலங்காவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: மக்களை வழமைக்கு திரும்புமாறு பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்

சிறிலங்காவில் பாதுகாப்பு பணியில் முப்படையினரும் 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்கள் வழமைக்கு திரும்பலாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர், உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் 24 மணிநேரமும் ஈடுபட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முப்படையினருக்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும். அவர்கள் 24 மணிநேரமும், உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லா பாடசாலைகள், மத வழிபாட்டு இடங்கள், சுற்றுலா தலங்கள், விடுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வழமைபோல தமது நாளாந்த பணிகளில் ஈடுபட முடியும்.

எமது புலனாய்வு அமைப்புகளும், படைகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நன்கு அறிந்து, உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. உங்களின் பாதுகாப்பு எங்களின் பொறுப்பு.

சமூக ஊடகங்களில் வெளியாகின்ற போலியான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.