சிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகளை சீனா எதிர்க்காது

அம்பாந்தோட்டையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நாளாந்த செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”அம்பாந்தோட்டைக்கு அருகே இந்திய நிறுவனம் ஒன்று, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க 3.85 பில்லியன் டொலரை செலவிடவுள்ளது. இது சிறிலங்காவுக்கு மிகப் பெரிய முதலீடு. அம்பாந்தோட்டை துறைமுகம், பாதை மற்றும் அணை திட்டத்தின் ஒரு முக்கியமான ஒத்துழைப்புத் திட்டமாகும்.

இந்த நிலையில், இந்தியாவின் முதலீடு சீனாவின் முதலீடுகளுக்குச் சவாலாக இருக்குமா? இந்த நேரத்தில் சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே ஒரு மூலோபாய போட்டி இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் பதிலளிக்கையில்,

“நீங்கள் குறிப்பிட்ட தகவலைப் பற்றி நான் இன்னமும் அறியவில்லை. அதுபற்றி ஆராய வேண்டும்.

ஆனாலும், சீனாவும் சிறிலங்காவும் பல்வேறு துறைகளில் ஆழமான, விரிவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் ஒரு நல்ல விடயம்.

இருதரப்புக்கும் பயனளிக்கும் இந்த திட்டத்தின் மூலம் சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கும், சமூக அபிவிருத்திக்கும் சீனா உதவியுள்ளது. சீனாவின் உதவியை சிறிலங்கா மதித்துப் பாராட்டுகிறது.

அதேவேளை, இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான, பரஸ்பர ஒத்துழைப்பை அல்லது, சிறிலங்காவுக்கும் ஏனைய தரப்புகளுக்கும் இடையிலான அத்தகைய ஒத்துழைப்பை சீனா வெளிப்படையாக அணுகுகிறது.

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு, இந்தியாவுடனும் ஏனைய தரப்புகளுடனும் இணைந்து செயற்பட சீனா தயாராக இருக்கிறது.

வெளியுறவு விவகாரங்களில், நீங்கள் கற்பனை செய்வதை விட சீனா இன்னும் பரந்த மனப்பான்மையைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.