சிரியாவின் கிழக்கே வான்வழி தாக்குதல்; பொதுமக்களில் 14 பேர் பலி

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு போராட்டங்கள் நடைபெற தொடங்கின. இது வன்முறையாக வெடித்தது. ஆசாத்தின் அரசு கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது ராணுவம் கொண்டு தாக்குதலை நடத்தி வருகின்றன.

ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கத்தினையும் கட்டுப்படுத்த அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சிரியாவில் கூட்டணி படைகளின் ராணுவ தளம் அமைந்த அல் பஹ்ரா கிராமம் அருகே ஜிகாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து பதிலடியாக இந்த பகுதியில் வான்வழி தாக்குதல் தீவிரமடைந்தது.

இதனால் ஹாஜின், சவுசா மற்றும் அல் ஷாபா உள்ளிட்ட கிராமங்களின் மீது கூட்டணி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 14 பேர் பலியாகினர். அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட 5 குழந்தைகளும் அடங்குவர்.

இதுபற்றி சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்துல் ரஹ்மான் கூறும்பொழுது, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் உயர கூடும். இந்த தாக்குதலில் ஐ.எஸ். ஜிகாதிகளில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.