சின்னத்தை மறுபரிசீலனை செய்ய தயாராகும் சஜித் கூட்டணி!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணிக்காக முன்மொழியப்பட்ட (இதயம்) சின்னத்தை மறுபரிசீலனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் புதிய கூட்டணிக்கு ‘தேசிய சமாதான கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளதோடு புதிய சின்னம் தொடர்பாக கட்சிக்குள் முரண்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகின.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த முன்மொழியப்பட்ட புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, சின்னம் தொடர்பாக தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனக் கூறினார்.

எனவே ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுடன் அமர்ந்து சின்னம் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட அவர்கள் தயாராக இருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், முன்மொழியப்பட்ட புதிய கூட்டணி ‘யானை’ சின்னத்திலேயே போட்டியிடும் என்ற முடிவு எட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.