சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தக் கோரி ஜனாதிபதி, பிரதமரிடம் கோர முடிவு!

வடக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தக் கோரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை விடுப்பதற்கு, நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்களாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமகாலத்தில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

இதற்கு முன்னதாக முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி எல் வலயம் மற்றும் மகாவலி ஜே வலயம், மகாவலி கே வலயம் ஆகியவற்றினால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் சுமார் 15 வருடங்களில் வரவுள்ள பாதிப்புக்கள் குறித்து உரிய ஆதாரங்கள் மற்றும் விளக்கப்படங்களுடன் கூறப்பட்டது.

இதன்படி அடுத்த 15 வருடங்களில் வடமாகாணத்தின் சனத்தொகை இயற்கைக்கு மாறாக சடுதியாக அதிகரிக்கும் எனவும் அந்த அதிகரிப்புக்கு பிரதான காரணமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அமையும் எனவும் எதிர்வு கூறப்பட்டது.இதனால் வடமாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பு பாரிய கேள்விக்குள்ளாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்த மாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளனர். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் என ஒரு சிலரும், மகாவலி அதிகாரசபை சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டு வரலாம் என சிலரும், எல்லை கிராமங்களில் தமிழ் மக்களை குடியேற்றலாம் என சிலரும் கூறியிருந்தனர்.

வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் சகல திட்டமிட்ட குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சர் ஆகியோரை கோருவதென நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

மேலும், இந்த தீர்மானம் குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY