சிங்கப்பூர் அமைச்சர் – ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இக்கலந்துரையாடல் முக்கியமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது.

அத்துடன், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இணையப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வெறுப்புப் பேச்சு, இணைய வழியாக தவறான தகவல்களை பரப்புதல் ஆகியவற்றிற்கு தீர்வு காணுதல் மற்றும் சமய நல்லிணக்கத்தை பேணுதல் தொடர்பாக சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

வர்த்தக அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த தரவு முகாமைத்துவத்தை வர்த்தகத் துறைகள் அதிகளவில் நம்பியிருக்கும் சமூக ஊடக புலனாய்வு மாதிரிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் மற்றும் ஆளடையாளத் தரவுகள் (பயோமெட்ரிக்) ஆகிய இரு துறைகளையும் இணைக்கும் மறுக்கமுடியாத அடையாளமாக சிங்கப்பூர் தற்போது ஆராய்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.