சார்க் மாநாடு – பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா!

பாகிஸ்தானில் இடம்பெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காதென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார்.

தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்புநாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

“பாகிஸ்தானின் அழைப்பை நாங்கள் ஏற்கப்போவதில்லை. நான் ஏற்கனவே தெரிவித்திருந்ததைப்போல் இந்தியாவில் பயங்கரவாத செயல்பாடுகளை பாகிஸ்தான் நிறுத்தும்வரை அந்நாட்டுடன் எந்தப் பேச்சுக்கும் இடமில்லை. பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது” என சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை ஏற்பட்டது.

மேலும், வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.