சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. லேசான கால்வலியால் அவதிப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குணமடைந்ததால் அணியில் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். பாகிஸ்தான் அணியில் ஒரே மாற்றமாக ருமான் ரயீசுக்கு பதிலாக முகமது அமிர் இடம் பெற்றார்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி எதிர்பார்த்தது போலவே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், பஹார் ஜமானும் இறங்கினர். சில ஓவர்கள் (3 ஓவரில் 7 ரன்) நிதானத்தை கடைபிடித்த இருவரும் அதன் பிறகு படிப்படியாக ரன்வேகத்தை தீவிரப்படுத்தினர். பஹார் ஜமான் 3 ரன்னில் இருந்த போது பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். ஆனால் ‘ரீப்ளே’யில், அவர் கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால் பஹார் ஜமான் மறுவாழ்வு பெற்றார். அந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு இந்திய பந்துவீச்சை தவிடுபொடியாக்கினார்.

இந்த ஆடுகளம் முழுமையாக பேட்டிங்குக்கு சொர்க்கமாக விளங்கியது. களத்தில் சுழற்சியோ, ஸ்விங்கோ பெரிய அளவில் ஆகவில்லை. அதனால் துல்லியமாக பந்து வீசினால் மட்டுமே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்ற நிலைமையில், புவனேஷ்வர்குமார் தவிர மற்றவர்களின் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. சில ரன்-அவுட்டுகளையும் இந்திய பீல்டர்கள் நழுவ விட, பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் வலுவான அஸ்திவாரம் உருவாக்கினர். 18 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. ஐ.சி.சி. தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடக்க ஜோடி 100 ரன்கள் சேர்த்தது இதுவே முதல் முறையாகும்.

ஒரு வழியாக தொடக்க கூட்டணி ஸ்கோர் 128 ரன்களை எட்டிய போது ரன்-அவுட்டில் பிரிந்தது. அசார் அலி 59 ரன்களில் (71 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அடுத்து பாபர் அசாம் இறங்கினார்.

மறுமுனையில் பஹார் ஜமான், பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சுழட்டியடித்தார். ஜடேஜா, அஸ்வின் ஓவர்களில் சிக்சர்கள் பறந்தன. இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் மளமளவென எகிறியது. அஸ்வினின் பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் சிரமமின்றி அடித்து நொறுக்கிய போதிலும் அவருக்கு தொடர்ந்து கேப்டன் கோலி வாய்ப்பு வழங்கியது கடுப்பேற்றியது. அரைஇறுதியில், பகுதி நேர பவுலர் கேதர் ஜாதவ் திருப்புமுனை ஏற்படுத்தினார். சமயோசிதனமாக அவரையாவது சீக்கிரம் அழைத்திருக்க வேண்டும். அதையும் கோலி தாமதப்படுத்த எல்லாமே பாகிஸ்தானுக்கு வசதியாக போய் விட்டது.

இந்திய பந்து வீச்சை வறுத்தெடுத்த பஹார் ஜமான் பவுண்டரி அடித்து தனது ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்தார். பாகிஸ்தான் மெகா ஸ்கோரை நோக்கி பயணிக்க வித்திட்ட பஹார் ஜமான் 114 ரன்களில் (106 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்களும் எதை பற்றியும் கவலைப்படாமல் அதிரடியில் மிரட்ட, எந்த பவுலரை பயன்படுத்துவது என்பதே ஒரு கட்டத்தில் கோலிக்கு பெரும் தலைவலியாக போனது. 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய சோயிப் மாலிக் 12 ரன்னிலும், பாபர் அசாம் 46 ரன்களிலும் (52 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினர்.

இறுதி கட்டத்தில் முகமது ஹபீஸ் பாகிஸ்தானின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி 33 ரன்கள் விட்டுக்கொடுத்தது மட்டுமே கொஞ்சம் ஆறுதலான விஷயம். இல்லாவிட்டால் அவர்களின் ஸ்கோர் 350 ரன்களை தாண்டியிருக்கும்.

50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முகமது ஹபீஸ் 57 ரன்களுடனும் (37 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), இமாத் வாசிம் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்த இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே பேரிடி விழுந்தது. 3-வது பந்தில் ரோகித் சர்மா (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஆட வந்த ‘நம்பிக்கை நாயகன்’ கேப்டன் விராட் கோலி, ஸ்லிப்பில் சுலபமான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். அந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிய கோலி (5 ரன்) அவசரப்பட்டு அடுத்த பந்திலேயே கேட்ச் ஆகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானும் (21 ரன்) நிலைக்கவில்லை. இந்த மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் கபளகரம் செய்து இந்தியாவை நிலைகுலைய வைத்தார்.

33 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்து இந்திய அணி நெருக்கடி வளையத்தில் சிக்கியது. இதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ்சிங் (22 ரன்), டோனி (4 ரன்) ஆகியோரும் சீக்கிரமாகவே நடையை கட்ட இந்தியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்து அப்போதே தோல்வியும் உறுதியானது.

இதன் பின்னர் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேதனையில் தவித்த இந்திய ரசிகர்களின் இதயங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிப்பது போல் சிறிது நேரம் வேடிக்கை காட்டினார். சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கானின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விரட்டினார். ஆனால் பாண்ட்யாவை (76 ரன், 43 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) தேவையில்லாமல் ஜடேஜா ரன்-அவுட் செய்து, அந்த உற்சாகத்துக்கும் குந்தகம் விளைவித்து விட்டார்.

30.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 158 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்து சாம்பியன்ஸ் கோப்பையை முதல் முறையாக தனதாக்கியது. மகுடம் சூடிய பாகிஸ்தான் அணிக்கு ரூ.14 கோடியும், 2-வது இடத்தை பிடித்த இந்தியாவுக்கு ரூ.7 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வானார். இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தொடர்நாயகன் விருதுடன், தங்க பந்தையும் பரிசாக பெற்றார். ரன் குவிப்பில் மொத்தம் 338 ரன்களுடன் முதலிடம் பிடித்த இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு தங்கபேட் வழங்கப்பட்டது.

பாகிஸ்தான்

அசார் அலி (ரன்-அவுட்) 59

பஹார் ஜமான் (சி) ஜடேஜா

(பி) பாண்ட்யா 114

பாபர் அசாம் (சி) யுவராஜ்

(பி) ஜாதவ் 46

சோயிப் மாலிக் (சி) ஜாதவ்

(பி) புவனேஷ்வர் 12

முகமதுஹபீஸ்(நாட்-அவுட்) 57

இமாத் வாசிம் (நாட்-அவுட்) 25

எக்ஸ்டிரா 25

மொத்தம் (50 ஓவர்களில்

4 விக்கெட்டுக்கு) 338

விக்கெட் வீழ்ச்சி: 1-128, 2-200, 3-247, 4-267

பந்துவீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 10-2-44-1

பும்ரா 9-0-68-0

அஸ்வின் 10-0-70-0

ஹர்திக் பாண்ட்யா 10-0-53-1

ஜடேஜா 8-0-67-0

கேதவ் ஜாதவ் 3-0-27-1

இந்தியா

ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ

(பி) அமிர் 0

ஷிகர் தவான் (சி) சர்ப்ராஸ்

அகமது (பி) அமிர் 21

விராட் கோலி (சி) ஷதப்

(பி) அமிர் 5

யுவராஜ்சிங் எல்.பி.டபிள்யூ

(பி) ஷதப் 22

டோனி (சி) இமாத் வாசிம்

(பி) ஹசன் அலி 4

கேதர் ஜாதவ் (சி) சர்ப்ராஸ்

அகமது (பி) ஷதப் 9

ஹர்திக் பாண்ட்யா

(ரன்-அவுட்) 76

ஜடேஜா (சி) பாபர் அசாம்

(பி) ஜூனைட் கான் 15

அஸ்வின் (சி) சர்ப்ராஸ் அகமது

(பி) ஹசன் அலி 1

புவனேஷ்வர்குமார்

(நாட்-அவுட்) 1

பும்ரா (சி) சர்ப்ராஸ் அகமது

(பி) ஹசன் அலி 1

எக்ஸ்டிரா 3

மொத்தம் (30.3 ஓவர்களில்

ஆல்-அவுட்) 158

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-6, 3-33, 4-54, 5-54, 6-72, 7-152, 8-156, 9-156

பந்துவீச்சு விவரம்

முகமது அமிர் 6-2-16-3

ஜூனைட் கான் 6-1-20-1

முகமது ஹபீஸ் 1-0-13-0

ஹசன் அலி 6.3-1-19-3

ஷதப் கான் 7-0-60-2

இமாத் வாசிம் 0.3-0-3-0

பஹார் ஜமான் 3.3-0-25-0

LEAVE A REPLY