சவூதிஅரேபியாவில் முதன் முறையாக கால்பந்து போட்டியை நேரில் பார்க்க பெண்களுக்கு அனுமதி

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நவீனப்படுத்துதல் நடவடிக்கையின் காரணமாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக பெண்கள் சினிமா பார்க்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பரில் அது நீக்கப்பட்டது. நாட்டில் கேளிக்கை துறையை வளர்ச்சி அடைய செய்ய இத்தகைய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் அது அமலுக்கு வர உள்ளது. தற்போது பெண்கள் தங்களுக்குரிய கார்களை தேர்வு செய்ய அவர்களுக் கென்றே ‘ஷோரூம்‘கள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு சவுதி அரேபியா பெண்கள் ஸ்டேடியத்துக்கு வந்து கால்பந்து போட்டியை நேரில் பார்த்து மகிழ அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அதற்காக தடை நீக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நேற்று ஜெட்டாவில் நடந்த கால்பந்து போட்டியை பெண்கள் நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று கால்பந்து போட்டியை கண்டு ரசித்தனர்.

பலர் தங்களது செல் போன்களில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு தங்களுக்கு பெருமை அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY