சவுதி ஊடகவியலாளர் கொலை! – விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து

சவுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் துருக்கியில் கொலைசெய்யப்பட்டதாக நம்பப்படும் நிலையில், இவ்விடயம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

கருத்துச்சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் டேவிட் காயே இதனை வலியுறுத்தியுள்ளார்.

இஸ்தான்புல்லிலுள்ள சவூதி தூதரகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி அதன் பின்னர் காணாமல் போனார். எனினும், அவரை துருக்கி கொலை செய்துள்ளதாக சவுதி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளர் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென ஐ.நா. தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட குறித்த விசாரணை உதவுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர்களை பாதுகாப்பது தொடர்பில் ஐ.நா.வில் உள்ள ஏற்பாடுகள் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமாயின் இவ்விடயம் குறித்த சுயாதீன விசாரணை அவசியமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமையின் பின்னணியில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சவுதி ஊடகவியலாளர் உயிருடன் உள்ளாரென தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ள துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன், துருக்கி மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவத்தின் பின்னணியில் சவுதி அரேபியா உள்ளதென வொஷிங்டன் போஸ்ட் ஊடக நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.