சவுதி அரேபியாவில் சொகுசு சிறை மீண்டும் ஓட்டல் ஆக மாற்றம்

சவுதிஅரேபியாவில் பட்டத்து இளவரசர் ஆக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு அவர் நிறைய மாற்றங்கள் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு முக்கிய அதிகாரிகளுடன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 381 பேர் லஞ்சம் மூலம் அளவுக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் கைது செய்யப்பட்டனர். ‘தி ரிட்ஸ் கட்லூன்’ என்ற சொகுசு ஓட்டல் சிறையாக மாற்றப்பட்டு அங்கு அவர்கள் அடைக்கப்பட்டனர்.

அவர்களில் சவுதி அரேபியாவின் முக்கியமான பணக்காரரும், இளவரசருமான அல்வாலீத் பின் தலால் என்பவரும் ஒருவர். இவர்மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது. பணமோசடி செய்ததாகவும், நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட அனைவரும் ஓட்டலில் உள்ள 492 அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். எனவே, அந்த ஓட்டல் மூடப்பட்டு சிறைச் சாலையாக செயல்பட்டது.

இந்தநிலையில் இளவரசர் அல்வாலீத் பின் தலால் விடுதலை செய்யப்பட்டார். மேலும் 325 பேர் நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். 56 பேர் மட்டும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.

அதைதொடர்ந்து அந்த ஓட்டல் மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருகிற 14-ந்தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. முன்பு இருந்ததை விட அனைத்து அறைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY