சர்வதேசத்தால் கட்டுப்படுத்த முடியாத தீவிரவாதிகளை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது: கபீர் ஹாசிம்

பாதுகாப்புத் தரப்பினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கியமையாலேயே, சர்வதேச நாடுகளால் கூட முடியாது போன தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை, இலங்கை இரண்டே வாரங்களில் செய்துக் காட்டியதென அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே கபீர் ஹாசிம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”இந்த தீவிரவாதம் என்பது இலங்கைக்கு மட்டுமே அச்சுறுத்தலான ஒரு விடயமல்ல. இது சர்வதேச ரீதியாக பரந்துக் காணப்படும் தீவிரவாதமாகும்.

இவர்கள் சில காரணங்களுக்காகவே தற்போது நமது நாட்டை தெரிவு செய்துள்ளார்கள். சர்வதேச தீவிரவாதம் தொடர்பில் யாரும் பெரிதாக கதைப்பதில்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனின் போன்ற நாடுகளில், இவ்வாறான தீவிரவாத செயற்பாடுகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டும், இதனை முழுமையாக அவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது.

எனினும், இலங்கையில் தீவிரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் ஸ்தீரப்படுத்தப்பட்டன. முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் முழுமையான அதிகாரங்களும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன.

இதனாலேயே, தாக்குதல் இடம்பெற்று இரண்டே வாரங்களுக்குள் தீவிரவாதச் செயற்பாடுகளை எம்மால் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமாக இருந்தது. நான் முஸ்லிம் என்றாலும், இலங்கையன் என்ற ரீதியிலேயே சிந்தித்து வருகிறேன்.

எனவே, இந்தத் தீவிரவாதிகள் நான் பின்பற்றும் மார்க்கத்துடன் தொடர்பில்லாதவர்கள் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

இதனால்தான், ஜம்மியத்துல் உலமா சபையினர் இறந்த தீவிரவாதிகளுக்கு இஸ்லாம் சமய முறைப்படி, இறுதிக் கிரியைகள் நடத்தக்கூடாது என்று பாதுகாப்புத் தரப்பினரிடம் கூறியிருந்தார்கள். தீவிரவாதி என்பவனுக்கு இனமோ, மதமோ என்றும் இருந்ததில்லை” என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.