சமாதான முன்னெடுப்புக்களில் அமெரிக்க தலையீடு வேண்டாம்! – பலஸ்தீனம்

இஸ்ரேல்-பலஸ்தீன சமாதான செயற்பாடுகளில் இனிமேல் அமரிக்கர்கள் தலையிடவேண்டிய அவசியமில்லையென பலஸ்தீனத்தின் சிரேஷ்ட சமாதானப் பேச்சாளர் ஷயிப் இரகெட் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தின் ரமெல்லாஹ் நகரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சிரேஷ்ட சமாதானப் பேச்சாளர் ஷயிப் இரகெட் கருத்துத் தெரிவிக்கையில்,

“இவ்வாறு உலக நாடுகள் அனைவரும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு செவிசாய்த்து செயற்படுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானங்களைக் கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக உலக நாடுகள் செயற்படுவதோடு அமெரிக்காவினை நடுவராக நினைக்கின்றனவா?” என கூடியிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி கேள்விக்கணைகளை ஷயிப் இரகெட் தொடுத்துள்ளார்.

அத்துடன் இனிமேல் அமெரிக்கா தங்கள் நாட்டிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுவார்த்ததைக்கான செயற்பாடுகளுக்குள் தலையிட வேண்டியதில்லையென ஷயிப் இரகெட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலினுடைய குற்றச் செயல்களைப் பாதுகாப்பதற்காகவே அமெரிக்க ஜனாதிபதி பலஸ்தீன் சுதந்திர அமைப்பினை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஷயிப் அமெரிக்காவினை குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.