சமகி ஜனபல வேகயவிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு

தமிழ் முற்போக்கு கூட்டணி, சமகி ஜனபல வேகயவுடன் அதிகாரபூர்வமாக இன்று (26) இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

இன்றைய தினம் சமகி ஜனபல வேகயவின் புதிய அரசியல் நீரோட்டத்திற்கு முக்கியமான தினம் என்று தெரிவித்த அவர், இந்த கூட்டணியின் மூன்று கட்சிகளின் தலைவர்களினதும் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஒருமனதான தீர்மானத்தின் பேரில் இவ்வாறு ஆதரவளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகும்.

அந்த கட்சிகளின் தலைவர்களாக மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செயற்படுகின்றனர்.

இதேவேளை, பாட்டாளி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உருமய, சமகி ஜனபல வேகயவின் பிரதான பங்காளி கட்சியாக இணைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.