சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு … பக்தர்களுக்கு கெடுபிடி அதிகரிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் எல்லோரையும் குற்றவாளிகளாக கருத கூடாது என்று முதல்வர் பினராயி விஜயனிடம் கவர்னர் கண்டிப்புடன் கூறியுள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து கேரளாவில் கடந்த இரு மாதங்களாக போராட்டம் வெடித்துள்ளது.

கடந்த ஐப்பசி மாத பூஜை மற்றும் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டபோது கடும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதே போல் மண்டல கால பூஜையின்போதும் வன்முறை ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்தது.

இதையடுத்து கடந்த 15ம் தேதி நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பத்தனம்திட்டா கலெக்டர் நூகு இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதையடுத்து பக்தர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். சரணகோஷம் எழுப்பவும், சன்னிதானத்தில் இரவு தங்கவும் தடை விதிக்கப்படடது.

6 மணிநேரத்துக்குள் தரிசனம் முடித்து விட்டு திரும்பிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நிலக்கல் முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

நிலக்கல், பம்பை இடையே எந்த தனியார் வாகனத்தையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
போலீசாரின் இந்த கடும் சோதைனையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சிக்கினர்.

இதனால் போலீசுக்கும் அமைச்சர் மற்றும் பாஜ தலைவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் மத்திய அமைச்சர் நிலக்கலில் இருந்த பம்பைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

தரிசனம் முடித்து திரும்பும் வழியில் அவரது காரையும் போலீஸ் வழிமறித்து சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கேரள கவர்னர் சதாசிவத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் சபரிமலையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க கோரியும், போலீசாரின் கெடுபிடியை ரத்து செய்ய கோரியும் கேரள உயர்நீதிமன்றத்திலும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நடக்கிறது. இந்த நிலையில் கவர்னர் சதாசிவம் முதல்வர் பினராயி விஜயனை நேற்று அழைத்து பேசினார். அப்போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பலரிடம் இருந்து போலீஸ் கெடுபிடி குறித்து புகார்கள் வந்து இருப்பதாகவும், பக்தர்களை குறைவுபடுத்த கூடாது என்றும், சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக பார்க்க கூடாது என்றும் முதல்வரிடம் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு வசதிகள் மிகவும் குறைவாக இருக்கிறது. கழிப்பறை வசதி கூட செய்யப்படவில்லை என்றும் கவர்னர் முதல்வரிடம் கூறினார்.

இந்த குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதாக கவர்னரிடம் முதல்வர் உறுதி அளித்தார். இதற்கிடையே 7 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நேற்று இரவுடன் முடிவடைந்தது.

சபரிமலையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சியினரும், பக்தர்களும் தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனால் தடை உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்படாது என கருதப்பட்டது.
ஆனால் ஜனவரி 14ம் தேதி வரை தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி நாராயணன்.

கலெக்டர் நூகுவுக்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தடை உத்தரவை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி வரும் 26ம் தேதி வரை மேலும் 4 நாட்கள் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதனால் சபரிமலையில் பக்தர்களுக்கு மேலும் ெகடுபிடி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சபரிமலையில் பக்தர்களின் வருகை குறைவு காரணமாக கோயில் வருமானமும் பாதியாக குறைந்துள்ளது.