“சபரிமலையின் புனிதம் கெடுவதை இந்துக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆட்சியிலும் நேர்மை, கட்சியிலும் நேர்மை என்ற வகையில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. 59 நிமிடங்களில் ரூ.1 கோடி கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

இளைஞர்களை முதலாளிகளாக்கி அவர்கள் தொழிலாளர்களை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய மந்திரி லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் மக்களை காப்பாற்ற கூட்டணி அமைக்கவில்லை. தம் மக்களை காப்பாற்றுவதற்கு கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சினிமா துறையை மாற்றிவிட்டு அரசியல் பற்றி நடிகர் விஜய் பேசவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: இல்லை. சினிமா துறையில் உள்ள பிரச்சினைகள் பற்றி ஒழுங்காக பேசவேண்டும்.

கேள்வி: மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்புலம் என்னவாக இருக்கும்?

பதில்: பின்புலமா, பணப்பலமா, ஆட்சிப்புலமா, ஆட்சிப்பலமா என்று தெரியவில்லை. ஒரு ரகசிய சந்திப்பு இன்னொரு ரகசிய சந்திப்பை முறியடித்திருக்கிறது.

கேள்வி: சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்கள் செல்லலாம் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: பெண்கள் தான் சபரிமலையை பாதுகாப்போம் என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் நாங்கள் போகமாட்டோம் என்று சொல்கிறார்கள். சென்ற முறை நடை திறந்தபோது எப்படி அனைத்து வயது பெண்களும் போகமுடியவில்லையோ, அதுபோல இந்த முறையும் போக முடியாது. ஆனால் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சிலர் வேண்டும் என்றே அய்யப்பன் கோவிலுக்கு போகப்போகிறோம் என்று சொல்கிறார்கள். அவர்களை அனுமதித்து அந்த புனிதத்தை கெடுக்கும் அளவுக்கு நடைமுறைப்படுத்தினார்கள் என்றால் இந்துகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார்.