சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் 3 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா மாவட்டத்தின் கதிராஸ் பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்டனர். அப்போது, பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சண்டையில் 3 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து பெருமளவு ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து மாவோயிஸ்டுகளில் பலர் தப்பியோடி விட்டனர்.

இதற்கிடையே, நாராயண்பூர் மாவட்டத்தின் கரலாகாட் என்னும் இடத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் புரன் பொத்தாய் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தார். மேலும் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

LEAVE A REPLY