சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதியின் பின் உண்ணாவிரதத்தை கைவிட்டனர் கைதிகள்

Prisoners-150x150சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர்.

இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான சட்டத்தரணி நவாவி உறுதியளித்தார்.

இதற்கமைய தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாக தமிழ் அரசியல் கைதி மேலும் கூறினார்.

(முதலாம் இணைப்பு) சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதியின் பின் உண்ணாவிரதத்தை கைவிட தமிழ் அரசியல் கைதிகள் முடிவு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதிமொழிக்கு அமைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் தங்களது போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக வழக்கு விசாரணை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நவாவி, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்ப வகையில் போதியளவு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் கூடிய விரைவில் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டத்தரணி மன்றில் தெரியப்படுத்தினார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் அளவிற்கு குற்றச்சாட்டுக்கள் காணப்படும் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்பிவைக்க முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல்  தெரிவித்தார்.

நீண்டகாலமாக தடுப்பிலுள்ள தங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் வழக்குத் தாக்கல் செய்யுமாறும், அல்லது புனர்வாழ்விற்கு அனுப்புமாறும் கோரி மகஸின் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் இன்று வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதிமொழிக்கு அமைய போராட்டத்தை அவர்கள் கைவிடப்போவதாக அருட்தந்தை சக்திவேல் மேலும் கூறினார்.

LEAVE A REPLY