சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பை அவசரமாக அறிவித்தது ஏன்? – தினகரன்

தஞ்சை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட ஒரத்தநாடு தொகுதியில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.

ஈச்சங்கோட்டை, செல்லம்பட்டி, பாப்பாநாடு, தொண்டராம்பட்டு, ஒக்கநாடு கீழையூர், நெய்வாசல் ஆகிய பகுதிகளில் அப்போது அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

33 வருடங்கள் ஜெயலலிதாவிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் சசிகலா. அவரது வாழ்விலும்-தாழ்விலும் நாங்கள் பங்கு கொண்டோம். சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த உடனேயே முதல்-அமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் பதவி சுகத்தை விரும்பவில்லை.

இதற்கு மாறாக பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர். தமிழ்நாட்டு மக்கள் துரோகத்திற்கு எப்போதும் இடமளிக்க மாட்டார்கள். இதனால்தான் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதாவின் உண்மை தொண்டனாகிய என்னை அங்கீகரித்து வெற்றி பெற வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை பாதுகாக்க போராடிய 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். அதன்பிறகு தமிழகத்தில் உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமையும்.

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கப்படுவதாக சனிக்கிழமை அவசரமாக அறிவித்து திங்கட்கிழமை விழா நடத்தப்படுகிறது. இதை ஏன் முன்பே அறிவிக்கவில்லை. நான் மக்கள் சந்திப்பு பயணத்தில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள்.

ஜெயலலிதா மாபெரும் சக்தியாக விளங்கியதால் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா இருந்தவரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என பொதுமக்கள் என்னிடம் கூறி வருகிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இந்த பகுதியின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுப்போம். இதற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY