சஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இரவு இடம்பெறவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டே இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால செயற்பாடு என்பன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பல தடவைகள் கூடி ஆராய்ந்த போதிலும் இதுவரையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று அல்லது நாளைய தினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.