சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் திகதியை அறிவித்தார் சபாநாயகர்

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக உத்தியோகப்பூர்வமாக நியமிக்க கோரிய கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன்படி 2020 ஜனவரி 3 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது அவர் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்படுவார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க, இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதனை அடுத்து சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அடுத்த ஆண்டு ஜனவரி இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வின்போது நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.