சஜித் பிரதமர் வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – அஜித் பி பெரேரா!

சஜித் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து என்னையும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவையும் நீக்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்.

அந்த செய்தியைத் தவிர எமக்கு அது பற்றி எந்த தகவலும் தெரியாது. எமக்கு அவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுமில்லை. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்.

இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது எம்முடன் முற்போக்கு கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலவும் கைகோர்த்துள்ளன.

பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவே பிரதமர் வேட்பாளர் என்பதிலும் அவர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

தேர்தலில் எவ்வாறு போட்டியிடப் போகின்றோம் என்பது தொடர்பாக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.