சஜித்தை ரணிலுடன் ஒப்பிடாதீர்கள்: ஹிருணிகா காட்டம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை போன்றே செயற்படுவார் என எல்லோரும் எண்ணினார்கள், ஆனால் அவர் எதிர்க் கட்சிக்குரிய அனைத்து பொறுப்புகளையும் உரிய முறையிலேயே செய்து வருகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களினால் அலங்கரிக்கப்பட்ட கேக் போன்று உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்தினால், நாட்டுக்கு பயணளிக்கும் வகையில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என்றும் ஜனாதிபதி ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப ஊடக கண்காட்சிகளை காண்பித்து வருகின்றார்.

அதற்கமைய அண்மையில் வீடமைப்பு அதிகார சபைக்கு சென்றிருந்தார். இவ்வாறு செல்வதால் எந்த மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகின்றார்கள். எல்லோரும் எண்ணினார்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை போன்றே செயற்படுவார் என்று எல்லோரும் எண்ணினார்கள்.

ஆனால் அவர் எதிர்க் கட்சிக்குறிய அனைத்து பொறுப்புகளையும் உரிய முறையிலேயே செய்து வருகின்றார். இந்நிலையில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் குறைப்பாடுகள் காணப்படுவதாக 20ஆவது திருத்தம் ஒன்றை கொண்டுவருவதாக ஆளும் தரப்பினர் கூறிவருகின்றனர்.

ஆனால் , 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாட்டின் காரணமாகவே, இலங்கை வரலாற்றிலே முதன் முறையாக பிரதி பொலிஸ் மா அதிபரொருவராக ஒரு பெண் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.

சுயாதீன செயற்பாடுகளின் காரணமாகவே திறைமையானவர்கள் அவர்களுக்குறிய இடத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரதி பொலிஸ் மா அதிபராக அண்மையில் தரமுயர்த்தப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகாரத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜாசிங்க ஆராச்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அவரது சேவை அமையப் பெறவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.