சஜித்தை பிரதமராக்கி புதிய அரசாங்கத்தை அமைப்பது உறுதி – அரவிந்தகுமார்

எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி அவரின் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

எல்ல பல்லகெட்டுவ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்தவித இன ரீதியான வேறுபாடுகளும் இல்லை என தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறான ஒரு கட்சியின் மீது இனவாத சேற்றை பூசியே தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு ஆட்சியை கைப்பற்றியவர்கள் வழங்கிய எந்தவித உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படாமையால், வாக்களித்த மக்கள் புலம்பிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணி இனவாதம் பேசி மக்களை வஞ்சிக்கும் கட்சி அல்ல எனவும் ஆகவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் தமிழ் வாக்குகளை சிதறடிக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடமளிக்காது பதுளையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.