சஜித்திற்கு அவரது கருத்துக்களே எதிரி – மஹிந்த

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரசாரக் கூட்டங்களின்போதே தொடர்ச்சியாக பேசிக்கொண்டுவந்தால், கோட்டாவின் வெற்றி உறுதியாகிவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு, சஜித் பிரேமதாசவிற்கு எதிரி அவரது கருத்துக்களே என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்முறை நாம் வரலாற்றிலேயே இல்லாத அளவிலான பாரிய வெற்றியைப் பெறுவோம். ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் இராணுவத்தினரின் இன்றைய நிலைமையையும் நாம் மறந்துவிடவில்லை.

தற்போது, எமது எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளர், மக்களுக்காக உயிரையும் தியாகம் செய்யத்தயார் என்று கூறுகிறார். இரவில் 11 மணிக்குத் தூங்கி, காலை 4 மணிக்கு எழும்புவதாகக் கூறுகிறார். உண்மையில் பிரேமதாசவின் மகனுக்கு எதிரி, அவரது வாய்தான்.

நாம் அவரை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டியத் தேவைக் கிடையாது. அவர் இதுபோல தொடர்ந்தும் பேசிக் கொண்டே இருந்தால் எமது வெற்றி உறுதியாகிவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.