சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ‘ஜூன் 3’

சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை மறுசீராய்வு செய்யக் கோரி சசிகலா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் தெரிந்துவிடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

ஜெயலலிதா மறைந்த உடனேயே நிழலில் இருந்து நிஜத்துக்கு வந்தார் சசிகலா. அதிமுகவின் துணைப் பொதுச்செயலராகி டூப்ளிகேட் ஜெயலலிதாவாகவே தம்மை உருமாற்றிக் கொண்டார்.

அத்துடன் முதல்வர் நாற்காலியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் கொண்டுபோய் அடைத்து வைத்தார். நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தன சசிகலாவின் நடவடிக்கைகள்.

இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கான சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலாவின் அத்தனை கனவும் தகர்ந்து போய் சிறைக்கு போக நேரிட்டது.

3 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா, திடீரென தமக்கு தண்டனை விதிக்கப்பட்டதை மறுசீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டால் அரசியல் களத்தில் மீண்டும் ஒரு ஆட்டம் ஆடிவிடலாம் என கணக்குப் போட்டிருக்கிறார் சசிகலா.

சசிகலாவின் மறுசீராய்வு மனு மீது நாளை மறுநாள் அதாவது ஜூன் 3-ந் தேதியன்று விசாரணை நடைபெறும். அன்றைய தினம் சசிகலாவின் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டால் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய சசிகலா திட்டமிட்டிருக்கிறார். ஜாமீனில் வெளியே வந்துவிட்டால் அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறார் சசிகலா.

LEAVE A REPLY