சங்கரியின் படத்துடன் பிரசாரம் செய்யும் துணிவு உள்ளதா? – சத்தியலிங்கம் கேள்வி

SONY DSC
தமது கட்சியின் பொதுச்செயலாளரின் படத்தைப் போட்டு பிரசாரம் செய்யத் திராணியற்றவர்கள் தான் மாற்றுத் தலைமை பற்றி பேசுகிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில் பண்டாரிக்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க.சுமந்திரனின் அலுவலகத்தை திறந்து வைத்து இன்று உரையாற்றிய போதே சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆனந்தசங்கரி ஐயா அவர்களுடைய கட்சி வவுனியாவில் பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு இருந்தது. அந்த துண்டுப் பிரசுரத்தில் அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள். புதிய தலைமை அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது ஒன்று. இரண்டாவது இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதற்கு வாக்களிப்போம்.

இது இரண்டையும் கருப்பொருளாக கொண்டு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு உள்ளனர். ஆனால் இந்தக் கட்சிக்காரர்கள் ஏனோ தெரியவில்லை தங்களுடைய கட்சி பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள். ஆனந்த சங்கரி ஐயாவின் படத்தைப் போட்டால் தாங்கள் தோற்று போய்விடுவோம் என யோசிக்கிறார்கள்.

ஆனந்த சங்கரி ஐயா அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர். நீண்டகாலமாக அந்தக் கட்சியை வழிநடத்திய ஒருவருடைய படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள் உள்ளூர் தலைவர்களான மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் படங்களைப் போட்டு துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்கள். தங்களுடைய கட்சியின் தலைமையிலேயே நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது தங்களது கட்சியின் தலைவரின் படத்தை போட்டால் தோற்று விடுவோம் என்று பயப்பிடுபவர்கள் தலைமை மாற்றத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

முதல் உங்களுடைய தலைவர் யார்? என்பதை படத்தில் போட்டு காட்டுங்கள். நாங்கள் எங்களுடைய கட்சியின் பெரும் தலைவராக இருந்த தந்தை செல்வா, கூட்டமைப்பின் தலைவராகவுள்ள சம்மந்தன் ஐயா, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் படங்களை போட்டுள்ளோம்.

ஏன்? உங்களுக்கு அந்த துணிவு இல்லை. உங்களுடைய கட்சித் தலைவரையே காட்ட முடியாதவர்கள் தலைமை மாற்றம் பற்றி ஏன்? பேசுகிறீர்கள்” என தனது உரையில் வினாவெழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY