கோவில் தீ விபத்து – அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்தார். பள்ளியறை பூஜையில் பங்கேற்ற அவர், பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்தார்.

பின்னர் தீ விபத்தால் சேதம் அடைந்த வீரவசந்த ராயர் மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலில் கட்டிடம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

தீ விபத்து நடந்த பகுதிகளை பார்த்தபோது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் மேலும் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

ஆயிரங்கால் மண்டபம் அம்மன் அருளால் தப்பி உள்ளது. அந்த மண்டபம் எரிந்திருந்தால் தமிழகத்தின் புராதன பொக்கி‌ஷங்களும் அழிந்திருக்கும்.

கோவிலில் இருந்த கடைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெளிவு இல்லை. கோவிலில் மொத் தம் 115 கடைகள் இருப்பதாகவும் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 42 கடைகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

கோவிலில் இத்தனை கடைகள் எதற்கு உள்ளன? கோவிலைச் சுற்றிலும் கடைவீதி இருக்கிறதே. எனவே கோவிலுக்குள் கடைகள் தேவையில்லை. பூஜை பொருட்கள் விற்க வேண்டுமென்றால் இந்து அறநிலையத்துறையே மிக குறைந்த அளவில் கடைகளை நடத்தலாம்.

இந்து ஆலயங்களை சந்தைகளாக அதிகாரிகள் மாற்றக்கூடாது. மதுரை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்திலும் கடைகளை தனியார் நடத்த அனுமதிக்கக்கூடாது.

மீனாட்சி அம்மன் கோவிலின் உள்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு உரிய கருவிகளோ, வசதிகளோ இல்லை.

எனவே கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கோவில் நிர்வாகம், காவல்துறை, அரசு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.

கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அரசின் விசாரணையில் பக்தர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே வெளி அமைப்புகளை கொண்டு விசாரணை நடத்தலாம். இதில் கோவில் நிர்வாகத்துக்கு தயக்கம் தேவை இல்லை.

தற்போது தீவிரவாதிகள் புதிய முறைகளில் தாக்குதல் நடத்துகின்றனர். ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. எனவே வெளி விசாரணை தேவை என்பது ஏற்கத்தக்கதாகும்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 6 மாதங்களுக்குள் சீரமைக்க வாய்ப்பு இல்லை. 110 விதியின் கீழ் கட்டிடங்களை ஒரே நாளில் எழுப்பி விட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY