கோத்தாவுக்கு எதிரான வழக்கு – அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எனினும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய அகிம்சா விக்ரமதுங்க முடிவு செய்துள்ளார்.

வெளிநாட்டு அதிகாரபூர்வ விலக்குரிமை இருப்பதாக கூறி, அடிப்படையில், லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

“இது எனது தந்தையின் கொலைக்கு நீதிக்கான எனது குடும்பத்தின் நீண்டகால போராட்டத்தில் ஏமாற்றமளிக்கும் பின்னடைவாகும், அதேபோல் சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதற்காக தண்டனையில் இருந்து தப்பித்தலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இயக்கத்திற்கும் இது ஒரு ஏமாற்றமளிக்கும் பின்னடைவு” என்று அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.