கோட்டாவுக்கு எதிராக களமிறங்கும் வேட்பாளரை கட்சிக்குள் தேடும் ஐ.தே.க.

இந்த ஆண்டின் இறுதிப்பகுதி அதாவது டிசம்பரில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக தனது கட்சி சார்ந்தவர் ஒருவரையே நிறுத்த ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.

வேட்பாளர் தமது கட்சிக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் வேறு வெளி வேட்பாளர்களை நிறுத்த அனுமதிக்க போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி வேட்பாளர் கட்சியை தவிர்த்தவர் என வதந்திகள் இருந்தாலும் அவை உண்மைக்கு புறம்பானவை என கூறினார்.

இதனை உறுதிப்படுத்தும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவும் ஜனாதிபதி வேட்பாளர் தங்கள் கட்சியை சேந்தவர் ஒருவரே என்று தெரிவித்தார்.

அந்தவகையில் ஜனாதிபதி வேட்பாளராக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதி தலைவர் சஜித் பிரேமதாச அல்லது சபாநாயகர் கரு ஜயசூரிய இவர்களில் ஒருவராக இருக்கலாம் என அவர் கூறினார்.

மேலும் தமிக்க பெரேரா குறித்து வினவியபோது, “அவர் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருப்பார் என்றும் ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளராக அவர் நியமிக்கப்பட மாட்டார்.” என்றும் தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை களமிறக்குவது சாத்தியமில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

“ஐ.தே.மு. கூட்டணியின் கட்சியிலிருந்து வேட்பாளரை நிறுத்திவிட முடியும் என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அதனை விரும்பவில்லை” எனமயந்த திஸாநாயக்க கூறினார்.

ஏற்கனவே எதிர்க்கட்சி தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருகின்றார். இதற்காக அவர் அமெரிக்க குடியுரிமையும் துறந்தார் என அண்மையில் தெரிவித்தார்.

இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமையினால் வேட்பாளர் தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் பொதுவேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் தனது வேட்பாளர்கள் தொடர்பாக அதிக அக்கறை செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.